3/22/2006

30. பயணத்தில் தடைகளும் கொடைகளும்

செங்கடல் பகுதியிலிருந்து பயணம் மீண்டும் புறப்பட்டது. இப்போது ஒரு பாலை வழியே நடக்க நேர்ந்தது, நீரின்றி தவித்த மக்கள் மோயீசனிடம் குறை கூறினர்.

விரைவில் ஒரு நீரூற்றை கண்டனர் ஆனால் அதிலிருந்த நீர் கசந்தது. மோயீசன் கடவுளிடம் முறையிட அவர் ஒரு மரத்தைக் காட்டி,"அந்த மரத்தை வெட்டி இந்த ஊற்றில் போடுங்கள்" என்றார். மரத்தை நீரில் போட்டதும் நீர் சுவைத்தது. எல்லோரும், கால்நடைகளும் தாகம் தணித்தனர்.

பின்னர் எலிம் எனும் பாலைவனச் சோலை பகுதிக்கு வந்து முகாமிட்டனர்.

கடவுளின் மேகத்தூண் எலிமைக் கடந்து சென்றது எபிரேயர்களும் பின் தொடர்ந்தனர். இப்போது பயணம் கடினமான வறண்ட வனங்களுக்குள்ளாய் சென்றது. மக்கள் உணவின்றி வாடினர் மோயீசனிடம் மீண்டும் முறையிட்டார்கள்.

கடவுள் மோயீசனிடம்,"கடவுள்தான் இவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார் எனக் காட்டும்படிக்கு இவர்களுக்கு வானிலிருந்து உணவு அளிப்பேன். அவரவர் தங்கள் தேவைக்கேற்ப இந்த உணவை எடுத்துக்கொள்ளட்டும். தேவைக்கதிகம் எடுக்க வேண்டாம், ஆறாம் நாள் மட்டும் இரண்டு மடங்கு சேகரிக்கட்டும், ஏனெனில் ஓய்வு நாளான ஏழாம் நாள் உணவு வழங்கப்படாது". என்றார்.

கடவுள் வாக்களித்தது போல அடுத்த நாள் காலை வானிலிருந்து மாவு போன்ற ஒன்று பூமியில் விழுந்து கிடந்தது. காடை போன்ற ஒரு பறவையும் இவர்கள் உண்ணக்கிடைத்தது. மக்கள் மாவை வைத்து ரொட்டி செய்து உண்டனர். இந்த உணவுக்கு மன்னா எனப் பெயரிட்டனர்.

எபிரேயர் கானானை அடையும் வரை இந்த உணவு வானிலிருந்து வழங்கப்பட்டது.

29. செங்கடல் பிளந்தது

எகிப்திலிருந்து எபிரேயர் கிளம்பி மோயீசனை பின்தொடர்ந்தனர். கானான் நாட்டை கடவுள் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்.

ஜோசப்பின் சவப்பெட்டியை ஜோசப் விரும்பியபடி எபிரேயர்கள் எடுத்துச்சென்றனர். ஜோசப் தன் சவப் பெட்டி கடவுள் வாக்களித்த நாட்டில் புதைக்கப்படும்படி எபிரேயர்கள் எகிப்தை விட்டுப் போகும்போது எடுத்துச்செல்லப்படவேண்டும் என கேட்டிருந்தான்.

எபிரேயர்களின் பயணத்தில் கடவுள் பகலில் மேகத்தூணாகவும் இரவில் ஒளிதரும் நெருப்புத்தூணாகவும் நின்று வழிகாட்டினார்.

எபிரேயர்கள் செங்கடலை அடைந்து ஓய்வுக்காக அங்கே தங்கினர்.

எகிப்தில் பாரோ எபிரேயர்கள் வழிபாடு முடிந்து திரும்புவார்கள் என நினைத்திருந்தான். எபிரேயர்கள் திரும்பப்போவதில்லை என அறிந்து தன் படைகளைத் திரட்டி எபிரேயர்களை பின்தொடர்ந்தான்.

எகிப்திய படைகள் தங்களை நோக்கி வருவததைக்கண்ட எபிரேயர்கள் மோயீசனை பழிக்க ஆரம்பித்தனர். "எங்களை கொல்வதற்கா அழைத்து வந்தீர்" என்றனர்.

கடவுள் மேகத்தூணாகவும் நெருப்புத் தூணாகவும் எகிப்திய படைகளுக்கு முன் நின்று தாக்குதலை தடுத்தார்.


பின்பு மோயீசனை நோக்கி,"உன் ஊன்றுகோலை செங்கடல் மேல் நீட்டு" என்றார். மோயீசனும் தன் ஊன்றுகோலை நீட்டினார் பலத்த காற்று வீசி செங்கடலை பிரித்தது. நிலம் தெரிந்தது. எபிரேயர் அதன் வழி பயணித்து செங்கடலைக் கடந்தனர்.

எகிப்திய படைகளும் அவர்களை கடலுக்குள் பின் தொடர்ந்தனர். மீண்டும் மோயீசன் ஊன்று கோலை செங்கடல் மீது நீட்ட கடல் நீர் எகிப்திய படைகளை சூழ்ந்து அழித்தது.

மோயீசன் கடவுளைப் புகழ்ந்து ஒரு பாட்டை எழுத எபிரேயர்கள் அதை பாடி மகிழ்ந்தனர். கடவுள் தங்களுக்குச் செய்ததை எண்ணி அவருக்கு அடிபணிந்தனர்.

3/17/2006

28. பயணம் துவங்கியது

சோதனை மேல் சோதனை வந்தும் பாரோ மனமிரங்கவில்லை. எபிரேயர்களை விடுவித்துவிட மறுத்தான்.

கடவுள் மோயீசனிடம்,"உன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துச் செல்லும் காலம் வந்துவிட்டது. பாரோவின் மனம் திருந்தும்படிக்கும், கடவுள் இஸ்ராயேலுடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கவும் இறுதியாய் ஒரு கொடுமை எகிப்தியருக்குச் செய்யப்படும். அந்த நாளில் எபிரேயர்கள் எகிப்தைவிட்டு வெளியேற தயாராயிருக்கவேண்டும்.

அழிக்கும் தூதன் ஒருவன் இரவில் வந்து எகிப்தியரின் முதல் ஆண் குழந்தைகளைக் கொன்று போடுவான். எபிரேயர்கள் ஒரு வயது நிரம்பிய அப்பழுக்கில்லாத ஆட்டுக்குட்டி ஒன்றை பலி செய்து அதன் இரத்ததை தங்கள் கதவுகளில் பூசி வைப்பார்களாக. இரத்தம் பூசப்பட்ட வீடுகளை அழிக்கும் தூதுவன் கடந்து போவான்.

சுட்ட ஆட்டிறைச்சியோடு கசக்கும் கீரையும் புளிக்காத அப்பத்தையும் உண்ணுங்கள். தூதுவன் உங்கள் வீட்டைக் கடந்ததும் பயணிக்கத் தயாராயிருங்கள். எகிப்தியரிடம் ஆடை அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இதை அவர்கள் உங்களுக்குத் தரச் செய்வேன்." என்றார்.

மோயீசன் இதை எபிரேயர்களுக்குச் சொல்ல அவர்களும் சொன்னது போல செய்தனர்.

அன்றிரவு அழிக்கும் தூதுவன் வந்து பாரோ முதல் எகிப்தியரின் கடைசி அடிமை வரையிலான வீடுகளில் உள்ள அனைத்து முதல் ஆண் பிள்ளையையும் கொன்று போட்டான்.

எகிப்தில் என்றுமே இல்லாதபடி ஓலம் கேட்டது. பாரோ மனம் தளர்ந்தான். எபிரேயர்களை அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படச்சொல்லி மோயீசனுக்கு செய்தி அனுப்பினான்.

கடவுளின் தூதன் கடந்து சென்ற (Passover) நாள் யூதர்களின் மிகப் புனிதமான நாள், இயேசு அருந்திய கடைசி உணவு (The Last Supper) இதை நினைவுகூறத்தான்.

மொத்தம் ஆரு லட்சம் ஆண்களும் அவர்களது குடும்பமும் உடமைகளும் கால்நடகளும் எகிப்தைவிட்டு பயணித்தனர்.

3/15/2006

27. பாரோவின் முன்

மோசஸும் ஆரோனும் பாரோவிடம் சென்று எபிரேயர்கள் தங்கள் கடவுளை வணங்க மூன்று நாட்கள் அவர்களை விடுவித்துவிடக் கேட்டனர். பாரோ,"நீங்கள் சொல்லும் இந்தக் கடவுளை எனக்குத் தெரியாது" எனக் கூறி எபிரேயர்களின் வேலைச் சுமையை அதிகரித்து அவர்களை மேலும் கொடுமை படுத்தினான்.

எபிரேயர்களுக்கு செங்கல் செய்ய கொடுக்கப்படும் நார்கீற்றுக்களை அவர்களே சேகரித்து செங்கல் செய்யச் சொல்லப்பட்டது. செங்கலின் அளவும் குறையக்கூடாது.

அடிமைகளான எபிரேயர்களுக்கு வேலைப் பழுவும் கொடுமையும் அதிகரித்தது. அவர்கள் மோயீசன் மேல் கோபம் கொள்ளத்துவங்கினர்.

கடவுள் மோயீசனை திரும்ப பாரோவிடம் போய் தான் காண்பித்த அடையாளங்களை காண்பிக்கச் சொன்னார்.

பாரோவிடம் ஆரோனும் மோயீசனும் செல்ல அவன்," நீங்கள் கடவுளிடமிருந்து வருகிறீர்களென்பதற்கு என்ன ஆதாரம்?" என்றான். ஆரோன் தன் கைத்தடியை கீழே போட அது பாம்பாகியது.

பாரோ தன் அவையிலிருந்த மந்திரவாதம் மற்றும் மாயங்கள் செய்பவர்களை அழைத்தான் அவர்களும் தங்கள் தடிகளை பாம்பாக மாற்றிக் காட்டினர். ஆரோனின் பாம்பு எகிப்தியரின் பாம்பை விழுங்கியது. பாரோ இதனாலும் மனம் மாறவில்லை.

அடுத்தநாள் நைல் நதிக்கரையில் பாரோவை சந்தித்தனர். ஆரோன் தன் கைத்தடியை நைல்மீது நீட்ட நைல் நதியில் நீர் இரத்தமாக மாறியது. எகிப்திலிருந்த அத்தனை நீரும் இரத்தமாய் மாறியது. தன் மந்திரக்காரர்களும் நீரை இரத்தமாக மாற்றியதைக் கண்ட பாரோ எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

இன்னுமொரு வாரம் கழித்து பார்ரோவிடம் சென்றனர். இம்முறை ஆரோன் தன் கைத்தடியை நீட்ட ஆயிரக்கணக்கில் தவளைகள் எகிப்தில் புகுந்தன.

எங்கு பார்த்தாலும் தவளைகள், அரண்மனை முதல் அடுப்படி வரை. பாரோவின் ஆட்களாலும் இதேபோல் தவளைகளை வரவழைக்க முடிந்தது. பாரோ எரிச்சலடைந்து மோயீசனிடம் "நாளைக்கே இந்த தவளைகளை அழித்தால் உன் மக்களை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லலாம்" என்றான்.

அதுபோல அடுத்தநாள் எல்லா தவளைகளும், நதிகளில் வாழ்பவை தவிர, இறந்தன. பாரோ தன் வாக்கை மறந்து எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

மீண்டும் ஆரோன் தடியை நீட்ட சிறு பூச்சிகள் எகிப்தை ஆட்கொண்டன. இதை பாரோவின் ஆட்களால் செய்யமுடியவில்லை 'இது கடவுளின் செயல்தான்' என்றனர். இருப்பினும் பாரோ மனம் மாறவில்லை.

எபிரேயர்கள் வசித்துவந்த கோஷன் நகரில் மட்டும் எந்த பாதிப்புமில்லை.

"உன் மக்களை கோஷனிலேயே கடவுளுக்கு பலி செய்யச் சொல்" என்றான் பாரோ. எபிரேயர்கள் ஆட்டை பலி கொடுப்பது வழக்கம், எகிப்தியர்களோ ஆடு மாட்டை புனிதமாக கருதினர். "நாங்கள் ஆட்டை பலியிட்டால் எகிப்தியர்கள் கோபத்திற்கு ஆளாவோம் எனவே காட்டுக்குள் சென்று பலியிட வேண்டியுள்ளது" என்றார் மோயீசன்.

மீண்டும் சரி என்று சொல்லி பூச்சிகள் போனதும் எபிரேயர்களை அனுப்ப மறுத்தான் பாரோ.

அடுத்த அடையாளமாக எகிப்தியரின் கால்நடைகள் அனைத்தும் கொல்லப்பட்டன, எபிரேயர்களுக்கோ ஒன்றுமாகவில்லை.

அடுத்து வலிகொடுக்கும் கொப்பளங்கள் எகிப்தியருக்கு வந்தன. அதன்பின் பனிக் கட்டிகள் விழும் கொடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. பாரோ மோயீசனிடம்,"ஆண்களை மட்டும் அழைத்துச் செல்" என்றான் மோயீசன்,"எல்லோரும் எல்லாமும்" என்றார்.

பெரும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் வந்து எகிப்திலுள்ள பயிர்களை அழித்தது. இன்னும் பாரோ மனமிரங்கவில்லை."இனிமேல் என்னை வந்து பார்க்கதே" என்று மோயீசனை கடிந்த்தான்.

மோயீசனும்,"நான் வந்து உம்மை இனி பார்க்கப்போவதில்லை ஆனால் கடவுள் எகிப்தியருக்கு இன்னொரு கொடுமையை நிகழ்த்துவார். அப்போது என் மக்களை அழைத்துச் செல்லுமாறு என்னை கெஞ்சுவீர்கள்" என்றார்.

26. எரியும் புதர்

மோயீசன், மாமன் ஜெத்ரோவின் ஊரில் ஒரு ஆயனாக மாறி வருடங்கள் பல போனது.

ஒருநாள் ஆடு மேய்க்கையில் மலைமீது ஒரு பசுமயான புதரில் தீ எரிந்துகொண்டிருந்ததை கண்டார். தொடர்ந்து எரிந்தும் புதர் சாம்பலாகாமல் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.

மோயீசன் அதை ஆராயும்படி மலையேறினார். புதருக்கு அருகில் போகும்போது ஒரு குரல் கேட்டது,"மோயீசன் உன் காலணிகளை கழற்றிவிட்டு வா". பயந்தபடியே மோயீசன் தன் செருப்புக்களை கழற்றிவிட்டு புதரின் அருகே சென்றார்.

மீண்டும் அந்தக் குரல் பேசியது,"மோயீசன், உன் முன்னோர்களின் கடவுள் நானே. எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை களைய நீ சென்று அவர்களை அழைத்து வந்து இந்த மலையில் என்னை வழிபடு" என்றது.

மோயீசன் இந்த பெரும் பொறுப்பை ஏற்க தயங்கினார். "நானா? நான் எப்படி பாரோவின் முன்னால்... இஸ்ராயேல் இனத்தையே வழிநடத்த என்னால் முடியுமா?" என்றார்.

கடவுள்,"நான் உன்னோடிருக்கிறேன்" என்றார்.

மோயீசன் இன்னும் நம்பிக்கையில்லாதிருந்தார். "எனக்கு சரியாக பேச வராதே?" என்றார். கடவுள்,"ஆரோன் உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறான் அவன் உனக்குப்பதிலாக பேசுவான்" என்றார்.

இன்னும் மோயீசனுக்கு நம்பிக்கை வராததால் கடவுள் மோயீசன் வைத்திருந்த ஆடு மேய்க்கும் தடியை கீழே போடச் சொன்னார். அது உடனே பாம்பாய் மாறியது. மோயீசன் பயந்து போனார். "உன் கையை உன் கச்சையினுள் விட்டு எடு" என்றார் கடவுள் மோயீசன் கையை ஆடைக்குள் விட்டு எடுக்கையில் அவர் கை தொழு நோய் பிடித்திருந்தது. மீண்டும் அவ்வாறு செய்கையில் பழையபடி குணமுற்றிருந்தது.

"எகிப்திலிருந்து இஸ்ராயேலர்களை விடுவிக்கும்படிக்கு அவர்களுக்கு சில அடையாளங்களை காண்பிப்பேன்." என்றார் கடவுள்.

மோயீசனும் தன் மக்களை மீட்க தன் மாமனார் ஜெத்ரோவிடம் விடைபெற்றுக்கொண்டு எகிப்து நோக்கி பயணித்தார். வழியில் ஆரோன் அவரை சந்தித்தார்.

இருவரும் எகிப்தை அடைந்து அங்குள்ள எபிரேய தலைவர்களை அழைத்து பேசி கடவுளின் மீட்புத் திட்டத்தை அறிவித்தனர். எபிரேயர் கடவுளைப் புகழ்ந்து மகிழ்ந்தனர்.

3/10/2006

25. மோயீசன்

மோயீசன் ஒரு நாள் எகிப்திய மேற்பார்வையாளன் ஒருவன் இஸ்ராயேல் அடிமையை அடித்து துன்புறுத்துவதைக் கண்டு கோபம் கொண்டார். அவனை கொன்று புதைத்தார். யாருக்கும் இது தெரியாது என நினத்தார்.

அடுத்த நாள் இரு அடிமைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதை தட்டிக் கேட்டார் அப்போது ஒரு எபிரேயன் அவரிடம்,"அந்த மேற்பார்வையாளைனை கொன்றது போல என்னையும் கொல்வாயோ?" என்றான். மோச்ஸ் தான் செய்த கொலை எல்லோருக்கும் தெரிந்துவிட்டதை அறிந்து பயந்தார்.

பாரோவுக்கும் இந்த செய்தி எட்டியது. மோயீசனை கொல்ல ஆணையிட்டான். மோயீசன் உயிர் பிழைக்க எகிப்தை விட்டு பாலையில் வனாந்தரங்களுக்குள் ஓடினார்.

மோயீசன் தப்பி ஓடி மிடியன் எனும் ஊருக்கு வந்தார். அங்கே கிணத்தடியில் இருக்கையில் சில பெண்கள் மந்தைக்கு நீர் கொடுக்க அழைத்து வந்தனர். ஆனால் வழக்கம் போல வேறு மந்தையினர் இவர்களை துரத்திவிடப் பார்த்தனர். மோயீசன் அவர்களிடமிருந்த் இந்தப் பெண்களை காப்பாற்றினார்.

அந்தப் பெண்களெல்லோரும் ஜெத்ரோவின் மகள்கள். நடந்ததை அவர்கள் ஜெத்ரோவிடம் சொல்ல அவர் மோயீசனை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். மோயீசன் ஜெத்ரோவோடு தங்கினார் அவரின் மந்தையை கவனிக்கும் ஆயனானார்.

ஜெத்ரோ தன் மகள் சிபொராவை மோயீசனுக்கு மணமுடித்து வைத்தார். இருவருக்கும் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது கெர்ஷோம் எனப் பெயரிட்டனர்.

இதே நேரத்தில் எகிப்தில், மோயீசனை கொல்ல நினைத்திருந்த பாரோ இறந்து போயிருந்தான். புதிய பாரோவின் ஆட்சியிலும் எபிரேயர்களுக்கு பழைய கொடுமைகள் நடந்துகொண்டிதானிருந்தன.

தம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு கடவுள் மனமிரங்கினார்...

24. மோசஸ் பிறந்தார்


மோசஸ், தமிழில் மோயீசன்.

ஜோசப்பின் கதையோடு பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமம்(Genesis) நிறைவடைகிறது. அடுத்த புத்தகமான யாத்ராகமம்(Exodus) மோயீசனின் பிறப்போடு துவங்குகிறது. எகிப்திலிருந்து கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு எபிரேயர்கள்(Hebrews) அழைத்துச்செல்லப்பட்ட விடுதலை பயணத்தின் கதையை சொல்கிறது யாத்திரை+ஆகமம்.

ஜோசப்பும் அவன் சகோதரர்களும் ஜோசப்பை நேசித்த பாரோவும் இறந்த பின், சில தலைமுறைகள் போயின. எபிரேயர்கள்(இஸ்ராயேலின் சந்ததியினர்) எண்ணிக்கையில் பெருகினர்.

அப்போது எகிப்தை ஆண்ட பாரோ,"எபிரேயர்கள் நம்மை விட எண்ணிக்கையில் பெருகிவிடுவார்கள். நம் எதிரிகளோடு சேர்ந்து நம்மை எதிர்க்கத்துணிவார்கள். எனவே அவர்களை அடிமையாக்குவோம்" என்று படைகளோடு சென்று எபிரேயர்களை அடிமையாக்கினான்.

எபிரேயர்கள் எகிப்தியர்களுக்கு அடிமையாய் கட்டடங்களுக்கான செங்கல் செய்யும் வேலை செய்யத்துவங்கினார்கள். அடிமைகளானபோதும் அவர்கள் வலிமை குறையவில்லை, மேலும் மேலும் எபிரேயர்களின் எண்ணிக்கை வளர்ந்தது.

பாரே கோபம் கொண்ட்டான். எபிரேயர்களுக்கு பிரசவம் பார்க்கும் இரு செவிலியர்களை அழைத்து எபிரேயப் பெண்களுக்கு ஆண்குழந்தை பெறுமானால் அவற்றை கொன்று போடச்சொன்னான். அவர்களோ அதை செய்யவில்லை. அரசன் கேட்டபோது "எபிரேயப் பெண்கள் வலிமையுள்ளவர்கள் நாங்கள் போகுமுன்பே பிரசவமாகிவிடுகிறது" என்றனர்.

பாரோ கோபத்தின் மிகுதியால் எபிரேயர்களுக்கு பிறக்கும் ஆண்குழந்தைகளை நைல் நதியில் எறிந்து கொன்றுபோடச் செய்தான்.

இந்த நேரத்தில் ஒரு எபிரேய தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கொலைக்கு பயந்து அதன் தாய் அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைலில் விட்டாள். குழந்தையின் அக்கா அந்தப் பெட்டியை பின் தொடர்ந்தாள்.

பெட்டி மிதந்து பாரோவின் மகள் குளித்துக்கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, அவள் அதை திறந்து பார்க்கையில் அழகிய ஆண்குழந்தையை கண்டெடுத்தாள். குழந்தையின் அக்கா,"இது ஒரு எபிரேயக் குழந்தை. இதற்குப் பால் கொடுத்து பராமரிக்க எபிரேயப் பெண் ஒன்றை அழைத்து வரவா?" என்றாள். பாரோவின் மகளும் சம்ம்மதித்தாள். "நீரிலிருந்து இவனை பெற்றதால் இவனுக்கு மோசே எனப் பெயர் வைப்பேன்" என்றாள்.

மோயீசனின் தாய் அவனை பராமரிக்க அழைத்துவரப் பட்டாள்.

மோயீசன் பாரோவின் மகளின் மகனாக, அரண்மனையில், இளவரசனாக வளர்ந்தான்.

எகிப்திய இளவரசனாக இருந்தபோதும் தன் மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை பார்த்துக் கவலைகொண்டான் மோயீசன்.

3/09/2006

23. கனவு நினைவானது

பஞ்சம் எகிப்தில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுமிருந்தது. ஜோசப்பின் தந்தை இஸ்ராயேலின் கானான் நாட்டிலும் கடும் பஞ்சம் வந்தது.

இஸ்ராயேல் தன் மகன்களை அழைத்து," எகிப்தில் தானியங்கள் கிடைக்கின்றன, போய் வாங்கி வாருங்கள்." என்றார். ஜோசப் இறந்ததாக நினைத்திருந்ததால் தன் கடைசி மகன் பெஞ்சமினை யாக்கோபு(இஸ்ராயேல்) மிகவும் விரும்பினார், மற்ற மகன்களோடு அவனை எகிப்துக்கு அனுப்பவில்லை.

நெடுநாள் கடந்து ஜொசப்பின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்தனர். ஆளுனான ஜோசப்பிடம் போய் தலை வணங்கி நின்றனர்.

ஆளுனரான ஜோசப் எகிப்து மன்னன் தனக்கு வைத்த எகிப்திய பேரில் அறியப்பட்டதாலும், 20 வருடங்கள் கழிந்திருந்ததாலும், தங்கள் சகோதரன் ஜோசப்தான் ஆளுநன் என அவர்களால் அறியமுடியவில்லை.

ஜோசப் தன் சகோதரர்களை கண்டுகொண்டான். ஆனால் அவர்கள் பழையபடி கொடுமைக்காரர்களாயிர்ப்பார்களோ என பயந்தான். அவர்களை சோதிக்கும்படி,"நீங்கள் எகிப்தை வேவு பார்க்க வந்திருக்கும் உளவாளிகள் எனக்கூறி சிறையிலடைத்தான்". அவர்கள் ஜோசப்பிடம்,"நாங்கள் இஸ்ராயேலின் மக்கள். தானியம் வாங்கத்தான் வந்திருக்கிறோம் எங்களுக்கு இன்னுமொரு தம்பி இருக்கிறான் அவன் எங்கள் தந்தையோடு இருக்கிறான்", என்றனர்.

ஜோசப் உடனே"அப்படியானால் போய் உன் தம்பியை அழைத்து வாருங்கள் நீங்கள் வரும்வரை இரண்டாமவன் யூதா சிறையிலிருப்பான்" என்றான். தன் வேலையாட்களை அழைத்து,"இவர்களுக்கு தானியங்கள் வழங்குங்கள். அவர்கள் தரும் காசை திரும்ப பைகளில் போட்டுவிடுங்கள்" என்றான்.

யூதா தவிர மற்ற சகோதரர்கள் பயந்தபடியே கானானுக்கு வந்தனர். தங்கள் தானியப் பைகளில் தாங்கள் கொடுத்த காசு கிடப்பதைப் பார்த்து மேலும் பயந்தனர். தந்தையிடம் நடந்ததைக் கூறி பெஞ்சமினை கூட்டிச்சென்றால் யூதாவை திரும்பப் பெறலாம் என்றனர்.

எற்கனவே ஜோசப்பை இழந்ததால் பெஞ்சமினை அனுப்ப இஸ்ராயேல் பயந்தார். இருப்பினும் தானியங்கள் எல்லாம் தீர்ந்து போனதும் மீண்டும், பெஞ்சமினுடன், தன் மகன்களை அனுப்பி வைத்தார்.

இந்தமுறை ஜோசப் அவர்களை தன் அரண்மனைக்கு அழைத்து விருந்து வைத்தான். ஆனால் தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொல்லவில்லை.

மீண்டும் தானியங்களோடு அவர்களை அனுப்பினான் ஆனால் இந்த முறை பெஞ்சமினின் பைக்குள் தன் ரசக் கோப்பையை போட்டு வைக்கச்சொன்னான். தன் சகோதரர்கள் எகிப்தின் எல்லையை எட்டுமுன் அவர்களை நிறுத்தி தன் கோப்பையை திருடிவிட்டார்கள் என அவர்களை பிடித்து வரச் செய்தான்.

தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என சகோதரர்கள் சொல்ல, பைகளை சோதனையிட்டான். "இதோ பெஞ்சமினின் பையில் என் கோப்பை உள்ளது இவனை மட்டும் நான் கைது செய்கிறேன்"என்றான் ஜோசப்.

தன் தந்தைக்கு பெஞ்சமினை பாதுகாப்பாக கொண்டுவருவோம் என வாக்களித்திருந்த சகோதரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். "இவன் அண்ணன் ஜோசப் இறந்து விட்டான், இவனே எங்கள் தந்தைக்குச் செல்ல மகன், இவன் எங்களோடு வரவில்லையென்றால் அவர் இறந்து போவார். எங்களால் அதை தாங்க முடியயது." என்றனர்.

ஜோசப் இத்தனை சோதனைகளுக்குள் தன் சகோதரர்கள் திருந்தியிருப்பதை உணர்ந்து தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொன்னான்.

பின்னர் அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொடுத்து போய் நம் தந்தையையும் உறவினர்களையும் அழைத்துவாருங்கள் என்றான். அவர்களும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் தந்தைக்குச்சொல்லி அவரை எகிப்துக்கு அழைத்து வந்தனர்.

பாரோ ஜோசப்பின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் எனவே அவன குடும்பத்தை வரவேற்று எல்லா வசதிகளும் கொடுத்து வாழவைத்தான்.

தன் சகோதரர்களுக்கு மேலாய் உயர்வான் என்கிற ஜோசப்பின் கனவு நனவானது.

22. பாரோவின் கனவு

எகிப்திய அரசன் பாரோவிற்கு ஒரு இரவில் இரு கனவுகள் வந்தன. அந்தக் கனவுகளை புரிந்து கொள்ள ஆசைப்பட்டான். எகிப்திலுள்ள அறிஞர்கள் யாராலும் அந்தக் கனவுகளுக்கு விளக்கம் கூறமுடியவில்லை. மன்னனின் கனவுகளை அறிந்த தலமை பட்லர் ஜோசப் தன் கனவுக்கு சரியான விளக்கமளித்தை பாரோவிடம் சொல்ல அவனும் ஜோசப்பை அவைக்கு அழைத்து வரச்சொன்னான்.

ஜோசப் அவைக்கு வந்தான். பாரோ அவனிடம் தன் இரு கனவுகளையும் சொன்னான்,"முதல் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தேன், திடீரென ஏழு கொழுத்த பசுக்கள் ஆற்றிலிருந்து தோன்றி அருகே புல் மேய்ந்தன. பின்னர் ஏழு மெலிந்து போன பசுக்கள் தோன்றின. கடும் பசியில் அவை கொழுத்த மாடுகளைத் தின்றன. அதன் பின்னும் பசி அடங்காமல் புல் மேய்ந்தன"

"இரண்டாம் கனவில் வயல்வெளியில் நின்றிருந்தேன் ஒரு சோளச் செடியில் ஏழு அழகிய முழுதாய் விளைந்த தட்டைகள் விளைந்தன. கொஞ்ச நேரம் கழித்து ஏழு காய்ந்த தட்டைகள் தோன்றி, நல்ல சோளத்தட்டைகளைத் தின்று அழித்தன. இந்தக் கனவுகளுக்கு விளக்கம் சொல்" என்றான்.

ஜோசப், "கடவுள் எகிப்தின் எதிர்காலத்தை உமக்கு காட்டியுள்ளார். ஏழு பசுக்களும் ஏழு தட்டைகளும் ஏழு வருடங்களை குறிக்கும். எகிப்தில் வரும் ஏழு வருடங்கள் செழிப்பானதாயும் அதன் பின் ஏழு வருடங்கள் வறட்சி மிகுந்ததாயும் இருக்கும்" என்று விளக்கம் தந்தான்.

பாரோ இந்த விளக்கத்தினால் மனம் மகிழ்ந்தான். ஜோசப்பை எகிப்தின் ஆளுநராக்கினான், ஒரு எகிப்திய பெண்ணையும் அவனுக்கு மணம் முடித்துவைத்து,"அரசன் எனக்கு அடுத்த படியாக நின்று எகிப்தை ஆள்வாய்" என்றான். அதே போல ஜோசப் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனுக்குப் பணிந்தனர்.

பக்கத்து ஊர்களில் தானியக் கிடங்குகளை கட்டி ஏழு செளிப்பான வருடங்களிலும் தானியங்களை சேர்த்துவைத்தான் ஜோசப். பஞ்சம் வந்தபோது எகிப்தியர்களுக்கும் இன்னும் பலருக்கும் சேர்த்த தானியங்களை விற்கத் துவங்கினான். அப்போது....

3/07/2006

21. கனவுகளைச் சொல்பவன்


பாரோ தன் தலமை உபசரிப்பாளரையும்(Butler) தலமை ரொட்டி செய்பவரையும்(Baker) சிறையிலடைத்திருந்தான்.

இருவருக்கும் ஜோசப் சேவகம் செய்தான்.

ஒரு இரவில் இருவருக்கும் கனவுகள் வந்தன. ஜோசப் அவர்களிடம் கேட்க, பட்லர், "என் கனவில் மூன்று கிளைகளுடைய ஒரு திராட்சை கொடி இருந்தது, துளிர்விட்டு மலர்ந்து கனிகள் வந்தன. என் கையில் பாரோவின் ரசக் கோப்பை இருந்தது. அந்தப் பழங்களைப் பிழிந்து பாரோவிற்க்கு வழங்கினேன். இதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா?" என்றான்.

ஜோசப்,"கடவுளால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும் என்றான். " கடவுளின் உதவியோடு கனவின் அர்த்தம் சொல்ல ஆரம்பித்தான்.
"மூன்று கிளைகள் மூன்று நாட்களை குறிக்கின்றன. மூன்று நாட்களில் உன்னை பாரோ விடுதலை செய்வார். மீண்டும் உன்னை சேவகம் செய்ய ஏற்றுக்கொள்வார். அப்போது நான்தான் இதை உனக்குச் சொன்னேன் என்பதை பாரோவிடம் சொல். நான் அடிமையாய் வந்தவன், ஒரு குற்றமும் செய்யாமல் சிறையிலுள்ளேன்" என்றான்

ரொட்டிக்காரன் இதைக் கேள்விப்பட்டதும் தன் கனவை சொன்னான்,"மூன்று கூடைகளில் ரொட்டிகளை பாரோவுக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன், மேலேயிருந்த கூடையிலிருந்து பறவைகள் ரொட்டிகளை கொத்திக்கொண்டிருந்தன". என்றான்.

ஜோசப் அவனிடம்,"மூன்று கூடைகளும் மூன்று நாட்கள். மூன்று நாட்களில் பாரோ உன்னை கழுவேற்றுவார். உன் உடலை பறவைகள் கொத்தித்தின்னும்" என்றான்.

ஜோசப் சொன்னது போல மூன்று நாட்களில் இருவருக்கும் நடந்தது.

பட்லர் பாரொவிடம் ஜோசப்பை பற்றி சொல்லாமல் போனான்.

இரு வருடங்களுக்குப் பிறகு....

20. போத்திபரின் மனைவி

ஜோசப்பை அழைத்து வந்த வியாபாரிகள் அவனை அடிமையாக போத்திபர் என்பவனிடம் விற்றனர். போத்திபர் எகிப்தின் பாரோவின் தலைமை சேவகன்.

போத்திபரிடம் அடிமையான ஜோசப் நல்ல வேலைக்காரன் எனப் பெயர் பெற்றான், விரைவில் போத்திபரின் வீட்டின் தலமை வேலைக்காரனானன்.

அழகனும் நேர்மையாளனுமான ஜோசப்பின் மீது போத்திபரின் மனைவி ஆசைகொண்டாள். அவனை அடையத் துடித்தாள். அவள் ஆசைக்குப் பணிய ஜோசப் மறுத்தான்.

பலநாட்கள் ஜோசப்பை பணியவைக்க போத்திபரின் மனைவி முயன்றும் முடியவில்லை.

ஒரு நாள் ஜோசப் தீவிரமாய் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது போத்திபரின் மனைவி பின்னாலிருந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள். ஜோசப் அவளிடமிருந்து ஓடிப் போகையில் அவன் சட்டை இவள் கையில் மாட்டிக்கொண்டது.

ஜோசப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டானென்று போத்திபரிடம் அவன் மனைவி பொய்யாக முறையிட்டாள். அவள் கையில் ஜோசப்பின் சட்டை இருப்பதைப் பார்த்த போத்திபர் ஜோசப்பை சிறையில் தள்ளினான்.

சிரையில் ஜோசப் சிறந்து விளங்கினான். அவன் நடத்தையை பார்த்த சிறைத்தலைவன் அவனை எல்லா கைதிகளுக்கும் தலைவனாக்கினான்.

19. ஜோசப்பின் வண்ண மேலாடை

யாக்கோபின் 11வது மகன் ஜோசப். ரேச்சேலின் முதல் மகன் யாக்கோபின் செல்லப் புதல்வன். யாக்கோபுக்கு ஜோசப்பின் மேல் அலாதி அன்பு. அவரின் மற்ற மகன்கள் ஜோசப் மீது வெறுப்படைய வைத்தது யாக்கோபின் செல்லம்.

யாக்கோபு ஜோசப்பிற்கு ஒரு அழகிய வண்ணங்கள் நிறைந்த மேலாடை ஒன்றை பரிசளித்திருந்தார்.

ஒருநாள் ஜோசப் தான் கண்ட கனவு ஒன்றை தன் சகோதரர்களுக்குக் கூறினான்,"வயல் வெளியில் நாமெல்லோரும் கதிர்களை கட்டி வைக்கிறோம். திடீரென என் கதிர் கட்டு எழுந்து நிற்கிறது. உங்கள் எல்லோரின் கட்டுக்களும் என் கட்டுக்கு பணிந்து வனக்கம் செய்கின்றன"என்றான்.

ஏற்கனவே ஜோசப்பை வெறுத்த அவன் சகோதரர்கள் மேலும் கோபம் கொண்டனர்.

ஜோசப்பிற்கு இன்னுமொரு கனவு வந்தது,"சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்குவதுபோலக் கண்டேன்" என தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் கூறினான்.


ஒரு நாள் இஸ்ரயேலின்(யாக்கோபு) முதல் பத்து மகன்களும் ஆடு மேய்க்க தொலைதூரம் சென்றனர். அவர்கள் திரும்ப நேரமானதைக் கண்டு யாக்கோபு அவர்களை கூட்டிவரும்படி ஜோசப்பை அனுப்பி வைத்தார்.

ஜோசப்பும் பல ஊர்கள் தேடித்திரிந்து கடைசியில் தன் சகோதரர்களை கண்டான். அவன் சகோதரர்கள் அவனைப் பிடித்து"இந்தக் கிணற்றுக்குள் இவனை இரக்கிவிடுவோம், நம் தந்தை கேட்டால் காட்டு விலங்குகள் இவனை கொன்றுவிட்டதாகச் சொல்லுவோம், அப்போது இவன் கனவுகள் என்னவாகும் பார்ப்பொம்" என்று ஜோசப்பை கட்டி கிண்ற்றுக்குள் இறக்கிவிட்டனர்.

மூத்தவன் ரூபன் தம்பி ஜோசப்பை தப்புவிக்க திட்டம் தீட்டினான்.

ரூபன் ஆடுகளை கண்காணித்திருக்கும்போது சில வியாபாரிகள் ஜோசப் இருந்த கிண்ற்றுப்பக்கம் வந்தனர். ஜோசப்பின் சகோதரர்கள் 20 வெள்ளிக்காக அவனை அடிமையாய் விற்றனர்.

ரூபன் திரும்பிவந்து தன் தம்பியைத் தேடுகையில் மற்றவர்கள் நடந்ததைக் கூறினர்.

இஸ்ராயேல் ஜோசப்புக்கு அளித்த மேலாடையின் மீது ஆட்டின் ரத்தத்தை ஊற்றி "இதை வழியில் பார்த்தோம் இது தம்பியின் ஆடையல்லவா?" என்றனர்.

யாக்கோபு இரத்தம் தோய்ந்த ஆடையைக் கண்டு ஜோசப் இறந்துவிட்டான் என நம்பி துக்கம் கொண்டார்.

ஜோசப் அடிமையாய் எகிப்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.

Joseph and the Amazing Techincolor Dreamcoat என்கிற Andrew Lloyd Webber படம் இந்தக் கதையை பற்றியது. அருமையான படம்.

3/06/2006

18. இஸ்ராயேல்


யாக்கோபு கானானுக்குத் திரும்புகையில் அவன் அண்ணன் எசாவுவின் கோபத்தை எண்ணி பயந்தான். கடவுள் இரு தூதர்களை அவனுக்குத் துணையாக அனுப்பினார்.

அண்ணனுக்குத் தன் வருகை குறித்து யாக்கோபு தூதுவிட்டான், எசாவு 400 பேர் கொண்ட படையொடு வருவதாக அறிந்தான் தன் உடமைகளையும் வாலையாட்களையும் இரண்டாகப் பிரித்தான், ஒன்று அழிந்தாலும் ஒன்று நிலைக்கும்படி. தன் மனைவிமக்களையும் தனித்து அனுப்பினான்.

அன்றிரவு எல்லோரும் தூங்கியபின் யாக்கோபின் கூடாரத்துக்குள் ஒரு புதியவன் வந்தான். யாகோபுடன் மல்யுத்ததில் ஈடுபட்டான். விடியல்வரை மல்யுத்தம் செய்தபின், வந்திருப்பது கடவுளின் தூதன் என்பதை அறிந்தான் யாக்கோபு.

தூதன் யாக்கோபுவை நோக்கி, "நீ கடவுளிடமும் மனிதர்களோடுமான சோதனைகளில் வெற்றிபெற்றுள்ளாய் இனிமேல் உன் பெயர் யாக்கோபல்ல இஸ்ராயேல்" என்றான்.

பின்னர் எசாவு யாக்கோபை சந்தித்ததில் மகிழ்ச்சிகொண்டான். இருவரும் கட்டித்தழுவி ஒருவரை ஒருவர் மன்னித்தனர்.

அதன்பின் யாக்கோபு கானானில் வாழத்துவங்கினான். ரேச்சேல் பெஞ்சமின் எனும் மகனை ஈன்றபின் இறந்து போனாள். யாக்கோபு மனமுடைந்தான்.

வயதான ஈசாக்கை கவனிக்கும் படி ஈசாக்கின் நாட்டிற்குச் சென்றான். பின்னர் ஈசாக் 180 வயதில் இறந்து போனார்.

17. யாக்கோபின் மாமன் மகள்கள்


யாக்கோபு ஊரைவிட்டு ஓடிப்போகையில் ரெபெக்காவின் அண்ணன் லபானை சந்திக்கிறான். தன் தங்கையின் அன்பு மகன் யாக்கோபை கண்டதும் லபான் மகிழ்வடைந்தான். "நீ என்னுடன் வேலை பார்க்க உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்" என்றான். யாக்கோபு லபானின் மகள் ரேச்சல் மீது ஆசை கொண்டிருந்தான். "நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை பார்ப்பதற்கு ஈடாக உம் அழகிய மகள் ரேச்சேலை எனக்கு மணம் செய்து தருவீரா?" என்றான் யாக்கோபு. லபான் சம்மதித்தான்.

ஏழு வருடங்கள் கழிந்ததும் லபானனொரு பெரிய திருமண விருந்து வைத்தான். தன் மகளை யாக்கோபிற்கு மணம் செய்து வைத்தான்.

திருமணம் முடிந்தது, யாக்கோபு தன் மனைவியின் முகத்தை மூடியிருந்த முகத்திரையை விலக்கிப் பார்த்தான்..அதிர்ச்சியுற்றான். அது ரேச்சேலின் மூத்தவள் லேகா.

தன் மாமன் தன்னை வஞ்சித்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டான். லபான் யாக்கோபிடம், "மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் முடிப்ப்பது எப்படி? இன்னும் ஏழு வருடங்கள் வேலை செய்து ரேச்சேலை மணந்துகொள்" என்றான்.

அப்படியே இன்னும் ஏழு வருடங்களுக்கு வேலை செய்து ரேச்சேலல மணந்துகொண்டான்.

சகோதரிகல் இருவருக்குமிடையே பலத்த பொறாமையும் போட்டியுமாயானதில் யாக்கோபுக்கு குழந்தைகள் பத்துக்கும் மேல்.

யாக்கோபு செல்வந்தனானான். இது லபானுக்கும் அவன் மகன்களுக்கும் பொறாமையூட்டியது.

கடவுள் யாக்கோபை கானான் நாட்டிற்குத் திரும்பச் சொன்னார். அவனும் யாருக்கும் சொல்லாமல் தன் குடும்பம், வேலையாட்கள் கால்நடைகளோடு கிளம்பி கானானை நோக்கி பயணித்தான்.

லபான் யாக்கோபு ஓடிப்போனதை கேள்விப் பட்டு கோபத்துடன் அவனை பின் தொடர்ந்தான். ஆனால் கடவுள் யாக்கோபுற்கு எதிரான கோபத்தை மாற்றினார். லபான் யாக்கோபை நல்லமுறயில் சந்தித்து வாழ்த்தினான்.

3/01/2006

16. ஈசாக்கின் ஆசீர்

ஆபிரகாமின் மகன் ஈசாக்குக்கு வயதாகி தள்ளாடும் நிலையில் அவரது ஆசீரை தன் மூத்தமகன் எசாவுவிற்கு அளிக்க விரும்பினார். ஈசாக்கு எசாவுவை மிகவும் நேசித்தார். ஈசாக்கின் மனைவி ரெபெக்கா யக்கொபுமீது பாசம் வைத்திருந்தாள்.

ஈசாக்கு எசாவுவை அழைத்து," கட்டிற்குப்போய் வேட்டையாடி கறி சமைத்து எனக்கு கொண்டு வா. என் ஆசீரை உனக்கு அளிக்கிறேன்." என்றார். இதை ரெபெக்கா கேட்டாள். தன் செல்லப்பிள்ளை யாக்கோபுவிற்கு இந்த ஆசீர் கிடைக்கச் செய்ய எண்ணினாள். யாக்கோபுவை அழைத்து,"உன் தந்தை தன் ஆசீரை எசாவுவுக்கு வழங்க இருக்கிறார். நீ போய் நாந்தான் எசாவு எனச் சொல்லி அந்த ஆசீரை வாங்கிக்கொள். கண்பார்வை குறைந்த ஈசாக்கால் உன்னை சரியாக அடையாளம் காண முடியாது." என்றாள்.

தன் தந்தையை வஞ்சிக்க யாக்கோபு தயங்கினான். ரெபெக்கா அவனை சமாதானம் செய்தாள். யாக்கோபு ரெபெக்காவிடம்,"அண்ணன் கைகளில் அடர்ந்த ரோமம் இருக்குமே அப்பா அதை வைத்துக் கண்டுபிடிக்க மாட்டார?" எனக் கேட்டான்.

ரெபெக்கா கறிசமைத்து யாக்கோபுவிடம் கொடுத்து கைகளில் ரோமம் தெரியும்படி விலங்கின் தோலை அவன் மேல் உடுத்தி ஈசாக்கிடம் அனுப்பிவைத்தாள்.

ஈசாக்கு யக்கொபின் குரலை அடையாளம் கண்டுகொண்டார், ஆனால் கைகளைத் தொட்டுப் பார்க்கையில் அவை எசாவுவின் கைகள் போல இருக்கவே வந்திருக்கும் யாக்கோபுதான் தன் பிரிய மகன் எசாவு என நம்பி தன் ஆசீரை அவனுக்கே வழங்கினார்.

சற்று நேரம் கழித்து எசாவு வந்தான். தன் தம்பி மீண்டும் தன்னை
வஞ்சித்து தனக்குச் சேரவேண்டியதை பெற்றுக்கொண்டதை அறிந்தான், கோபம் கொண்டான். ஈசாக்கு இறந்தபின் யாக்கொபை கொல்லத் திட்டம் போட்டான்.

ஈசாக்கும் ரெபெக்காவும் எசாவுவுக்குப் பயந்து யாக்கோபை ரெபெக்காவின் உறவினர்கள் வாழ்ந்த ஹாரன் நாட்டிற்கு அங்கேயே பெண்பார்த்து மணம் முடிக்கும்படி அனுப்பிவைத்தனர்.

15. இரு சகோதரர்கள்

ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள் பிறந்தனர், இரட்டையர்கள். மூத்தவன் எசாவு, இளையவன் யாக்கோபு(Jacob). எசாவு தலைசிறந்த வேட்டைக்காரன், வேட்டையாடுவதே அவனுக்கு பொழுதுபோக்கு, கொஞ்சம் முரடனும்கூட. யக்கோபு வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வம் கோண்டான், சாது, கடவுள் பக்தியில் சிறந்தவன்.

ஒரு நாள் எசாவு வேட்டையாடி உயிரே பொய்விடும் அளவுக்கு களைத்து வீடுவந்தான், அப்போது யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்தான். பசியும் களைப்பும் கொண்டிருந்த எசாவு யாக்கோபிடம்," தம்பி, உயிரே போய் விடும்போலிருக்கிறது குடிக்க கொஞ்சம் கூழ் கொடு" என்றான். யாக்கோபு எசாவுவிடம்,"நீ நம் வீட்டினந்தலைமகன் உரிமையை எனக்கு விட்டுக் கொடுத்தால் இதோ நான் சமைக்கிற கூழை உனக்கு குடிக்கக் கொடுப்பேன்" என்றான்.


பசியின் மிகுதியால் எசாவு,"இனிமேல் வீட்டின் மூத்தமகன் என்கிற உரிமை எனக்கில்லை உனக்குத்தான்" என தன் உரிமைகளை விட்டுக்கொடுத்தான். பின்பு யாக்கொபு சமைத்துக்கொடுத்த கூழை வாங்கி உண்டான்.