1/25/2006

4. தம்பியை கொன்ற அண்ணன்


ஆதாம் ஏவாளை அறிந்தான். ("Adam knew eve". பைபிளில் ஒரு ஆண் ஒரு பெண்ணை 'அறிந்தான்' என்பதற்கு, தாம்பத்ய உறவு கொண்டான் என்று அர்த்தம்.)

இவர்களுக்கு முதலில் காயினும், பிறகு ஆபேலுமாய் இரு மகன்கள். காயின் விவசாயி, ஆபேல் ஆடுமெய்ப்பவன்.

ஒருநாள் காயின் கடவுளுக்கு காணிக்கையாக விளைச்சலில் கொஞ்சம் எடுத்து வைத்தான். ஆபேல் தன் ஆடுகளில் ஒரு தலைச்சன்குட்டியை எடுத்து அதன் சிறந்த பாகங்களை பலியாகத்தந்தான்.

ஆபேலின் பலி கடவுளுக்கு விருப்பமாக இருந்தது. அதை எற்றுக்கொண்டார். காயினின் பலியை ஏற்றுக்கொளளவில்லை.

காயின் இதனால் வன்மம் கொண்டான், ஆபேலை கொல்லத்துடித்தான்.

கடவுள் அவனிடம்,"பாவம் உன்னை அகப்படுத்தக் காத்திருக்கிறது, அதிலிருந்து உன்னை காத்துக்கொள்" என எச்சரித்தார்.

காயினின் வன்மம் வளர்ந்தது. தன் தம்பி ஆபேலை ஒரு வயல்வெளிக்கு அழத்துச்சென்று கொன்று போட்டான்.

கடவுள் காயினிடம்,"உன் தம்பி எங்கே?", என "என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?" என பதில் தந்தான் காயின்.

கடவுள் அவனை தூர நாட்டிற்கு ஓடிப்போகும்படி சபித்தார். "நான் தூர நாட்டிற்கு ஓடிப்போனால் என்னை கொன்று போடுவார்களே? இந்தத்தண்டனை கொடுமையானது." என காயின் முறையிட, கடவுள் அவனிடம், "உன்னை கொல்பவனுக்கு பலமடங்கு தண்டனை காத்திருக்கிறது." என்று கூறி, யாரும் அவனை கொல்லாதபடி அவன்மீது ஒரு அடையாளமிட்டார்.

காயின் மனமொடிந்து ஏதேனைவிட்டு தொலைதூரம் போய் வாழ்ந்தான்.

1/24/2006

3. சுட்ட பழம்

ஆதாம் ஏவாளின் சுகவாசத்தில் தந்திரமிகுந்த பாம்பு நுழைந்தது.
ஏவாளிடம் பாம்பு கேட்டது, "கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா?"
ஏவாள், "எல்லாம், ஆனால் நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அது மட்டும் விலக்கு. அதை சாப்பிட்டால் இறப்பு வரும்" என்றாள்.

பாம்பு அவளைப்பார்த்து,"அதெல்லாமொன்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்" என ஆசைகாட்டியது.

ஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.

கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.

அப்போது கடவுள் "ஆதாம் எங்இருக்கிறாய்" எனத் தேடிவந்தார்.
ஆதாம்,"நிர்வாணமாயிருப்பதால் மறந்திருக்கிறேன்" என்றான்.

"நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது?,
விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டாயா?", கடவுள்

"இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்", ஆதாம்

"இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது", ஏவாள்

கடவுள் பாம்பை சபித்தார்.

ஏவாளிடம், "உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மிண்டும் விரும்பும்படி செய்வேன்." எனக் கடிந்தார்.

பிறகு ஆதாமிடம்,"நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்" என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார்.

எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா சந்தோஷ வாழ்வினயும் ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.

2. ஏதேன், ஆதாம் மற்றும் ஒரு விலா எலும்பு


கடவுள் உலகைப் படைத்தபின், கிழக்கே உலகின் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர்.

தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.

அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.

கடவுள் ஆதாமிடம், "இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார்.

ஆதாம் எல்லா ஜீவராசிகளுக்கும் பெயரிட்டான்.

அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான்.

இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். ஆதம் என்றால் 'கடவுளால் உருவாக்கப்பட்டவன்' என்று பொருள், எவாள் என்பதற்கு 'உயிரளிப்பவள்' (life giving) என்று பொருள். கவலை ஏதுமின்றி உல்லாசமாய் இருவரும் ஏதேனை அனுபவித்தனர்.

1. முதல் ஏழு நாட்கள்


துவக்கத்தில் கடவுள் வானத்தையும், பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கான வடிவமற்றதும், வெறுமையானதுமாயிருந்தது. இருள் படர்ந்திருந்தது. கடவுள் "ஒளி உண்டாகுக" என்றார், ஒளி உண்டானது.

வெளிச்சத்தை 'பகல்' என்றும் இருட்டை 'இரவு' என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.

பின்பு, பூமியிலிருந்த நீரை மேல் கீழாகப் பிரித்து, மேலிருக்கும் நீரைதாங்க(மேகங்கள்) ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு 'வானம்' எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று.

மூன்றாம் நாள் பூமியிலுள்ள நீரை ஒன்றாய்க் கூட்டி, தரைவெளிகளை உண்டாக்கினார். ஒன்றுசேர்த்த நீர் கடலானது. "பூமி எல்லாவித புல் பூண்டுகளையும், மரம் செடிகளையும் உருவாக்குக" எனக் கட்டளையிட்டார், அதன் படியே அழகிய மலர்தரும் செடிகளும், புல்வெளிகளும், கனிதரும் மரங்களும் உண்டாயின.

அடுத்தநாள், இரவை ஆள நிலவையும், நட்சத்திரங்களையும், பகலை ஆள சூரியனையும் உருவாக்கி ஆகாயத்தில் வைத்தார்.

ஐந்தாம் நாள் நீரில் நீந்தும் உயிரினங்களையும் வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

ஆறாம் நாள் கடவுள் நிலத்தில் ஊர்வன, நடப்பனவாகிய விலங்குகள் அனைத்தையும் படைத்தார். பூமியை ஆட்சி செய்ய, தன் சாயலில், ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைத்தார்.

இவை எல்லாம் நல்லவையே எனக் கண்டார். பகலும் இரவுமாகி ஆறாம் நாள் கழிந்தது.

எல்லாம் உருவாக்கியதும் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்.

பைபிள் கதைகள் - முன்னுரை

பல மதங்களின், கலாச்சாரங்களின் கதைகளைக் கேட்டும் படித்தும் மகிழ்ந்திருக்கிறேன். தமிழில் பைபிளில் உள்ள கதைகள் மற்றும் வரலாற்றை பதிப்பதை ஒரு பிரதி உபகாரமாக நினைக்கிறேன்.

பைபிள் என்பதற்கு 'புத்தகங்கள்' என்பது பொருள். பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரு பாகங்களாக பைபிள் பிரிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் கடவுளால் வழிநடத்தப்பட்ட வரலாற்றையும், அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் உட்கொண்டது பழைய ஏற்பாடு. இயேசுவின் பிறப்பு, போதனை, இறப்பு, உயிர்ப்பை எடுத்துரைக்கும் புத்தகங்களையும்(Gospels), முதல் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை குறிப்பும், அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனைகளும், திரு வெளிப்பாடும்(Revelations) புதிய ஏற்பாடு.

பைபிளின் ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் 1000 ஆண்டு இடைவெளிகளுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன. யூதர்களின் பண்டைய மொழியான எபிரேய மொழியில் பழய ஏற்பாட்டின் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் 31 புத்தகங்கள். இவற்றில் பல ஆபிரகாமின் வழிவந்த மதங்களான யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களுக்குப் பொதுவானவை.

தேவையான இடங்களில் மேலும் பைபிள் பற்றி தகவல்களிடுகிறேன்.

இந்தப் பதிப்பில் ஆங்கில பைபிள் ஒன்றிலிருந்து நானாகவே மறுமொழிபெயர்ப்பு செய்து கதை சொல்லும் பாணியில் வழங்குகிறேன். சில நுணுக்கங்கள் இந்த மொழிபெயர்ப்பில் சிதைய வாய்ப்புள்ளது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நானே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுருக்கமாக எழுதுவதையே நான் விரும்புவேன் எனவே கதைகள் ஓரளவு சுருக்கப்பட்டிருக்கும். பைபிளை முழுமையாக படித்து ஆத்மார்த்தமாக உணர விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு உகந்ததல்ல. இதைப்படிக்கும்போது வெறும் சுவாரஸ்யம் மட்டுமே மிஞ்சலாம்.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.