2/24/2006

14. ரெபெக்கா

ஈசாக்குக்கு திருமண வயது வந்தபோது ஆபிரகாம் அவரின் தலைமை வேலையாளை அழைத்து,"என் சொந்த நாட்டிற்குப்போய் என் மகன் ஈசாக்கை மணமுடிக்க ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து வருவேன் என எனக்கு சத்தியம் செய்" என்றார். அந்த நம்பத்தகும் வேலைக்காரனோ,"ஒரு பெண் எப்படி என்னை நம்பி இத்தனை தூரம் வருவாள்?" என்றான். " அப்படி வரவில்லையென்றால் உன் சத்தியத்திலிருந்து நீ விடுதலை பெறுவாய்." என ஆபிரகாம் அவருக்குச் சொல்லவே, வேலையாள் தேவையான பொருட்களோடும் ஒட்டகங்களோடும் ஆபிரகாமின் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான்.

ஆபிரகாமின் ஊரை அடைந்ததும் கடவுளிடம் வேண்டிவிட்டு,"இதோ இந்த கிணத்துக்கரையில் நான் காத்திருப்பேன். இங்கு நீர் இறைக்க வரும் பெண்களிடம் நீர் கேட்பேன். எவள் எனக்கும் என் ஒட்டகங்களுக்கும் நீர் மொண்டு தருகிறாளோ அவளை என் தலைவரின் மகன் மணமுடிக்குமாறு கேட்பேன்". எனச் சொல்லி கிணத்தருகில் நிற்கையில் ரெபெக்கா அங்கு வந்தாள்.

தலமை வேலையாள் அவளிடம் தண்ணீர் கேட்க அவளோ,"உமக்கும் உம் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து தருகிறேன்" என்றாள்.

அந்த வேலையாள் அவளிடம் பேசி ரெபெக்கா ஆபிரகாமின் உறவினள் என்பதை அறிந்துகொண்டான். பின்னர் ரெபெக்காவின் வீட்டிற்குச்சென்று,"ஆபிரகாமின் மகன் ஈசாக்கு திருமணம் செய்ய ரெபெக்காவை கடவுள் எனக்கு காண்பித்தார். அவளை என்னோடு அனுப்ப முடியுமா?" எனக் கேட்க அவர்களும் ரெபெக்காவின் சம்மதத்தோடு அவளை தலமை வேலைக்காரரோடும், அவள் தோழிகளோடும் அனுப்பிவைத்தனர்.

13. ஆபிரகாமின் பலி

கடவுள் ஒருநாள் ஆபிரகாமை அழைத்து,"நீ அன்பு கொண்டிருக்கும் உன் மகனான ஈசாக்கை(Isaac) கூட்டிக்கொண்டு போய் நான் உனக்கு காண்பிக்கும் மலை மீது எனக்காக பலியிடு." என்றார்.

ஆபிரகாமும் அதிகாலையில் எழுந்து தம் வேலைக்காரர்கள் சிலரோடு பலிகொடுக்கத் தேவையான விறகுகளை எடுத்துக்கொண்டு மலை நோக்கி பயணித்தார். மூன்றாம் நாள் மலையடியில் வேலைக்காரர்களை விட்டுவிட்டு யாக்கோபோடு தனியாக மலையில் ஏறினார்.

சிறுவன் ஈசாக் ஆபிரகாமை நோக்கி,"அப்பா, பலி கொடுக்க விறகுகள் மட்டுமே இருக்குதே ஆடு எங்கே?" என்றான். ஆபிரகாம்,"அது பற்றி கடவுள் பார்த்துக்கொள்வார்" என்றார்.

கடவுள் குறித்த இடத்தை அடைந்ததும். விறகுகளால் பலிபீடத்தை உண்டாக்கி தம் மகனை அந்த பீடத்தின் மேல் கிடத்தினார்.

ஈசாக்கை பலிகொடுக்க ஆபிரகாம் கத்தியை எடுக்கும்போது கடவுளின் தூதன் "ஆபிரகாம்! ஆபிரகாம்!" என அழைத்தார். ஆபிரகாம்,"இதோ உன் அடியேன்" என்றார். "உன் மகனை ஒன்றும் செய்யாதே. நீ உன் ஒரே மகனையே பலியிட முன்வந்து கடவுளுக்கு பயந்தவன் என்பதை நிருபித்துவிட்டாய் இதோ புதரில் இருக்கும் அந்த ஆட்டுக்குட்டியை உன் மகனுக்கு பதிலாக பலிகொடு" என்றார்.

ஆபிரகாமும் புதரில் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டெடுத்து பலிதந்தார்.

12. ஈசாக்கு

கடவுள் வாக்களித்தது போலவே சாரா வயதான காலத்தில் கருத்தரித்தாள். அவளுக்கு ஆண்பிள்ளை பிறந்தது, ஈசாக்கு என்று பெயரிட்டனர்.

ஈசாக்கு பால் குடிக்க மறந்த தினத்தன்று ஆபிரகாம் ஒரு மாபெரும் விருந்து வைத்தார். அந்த விருந்தின்போது ஆபிரகாமுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த இஸ்மாயேலும் ஈசாக்கும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். சாரா இதைப் பார்த்ததும் தன் மகனுக்கு கிடைக்கும் மரியாதைகளும் உரிமைகளும் இஸ்மாயேலுக்குப் போய்விடுமோ என அஞ்சினாள். ஆபிரகாமிடம் ஆகாரையும் இஸ்மாயேலையும் வீட்டைவிட்டு அனுப்பிவிடுமாறு கூறினாள்.

ஆபிரகாம் இஸ்மாயேலின்மீது மிகுந்த அன்புகொண்டவராயிருந்தார். கடவுள் அவரிடம், "சாரா சொல்வதைக் கேள். உன் மகன் இஸ்மாயேல் வழியும் ஒரு பெரிய குலத்தை ஏற்படுத்துவேன்" என்றார். ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மாயேலையும் நீரும் உணவும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு போகச்சொன்னார்.

ஆகாரும் சிறுவன் இஸ்மாயேலும் பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் கொண்டுவந்த உணவும் நீரும் தீர்ந்துபோனது. நிலமை மிகவும் மோசமாக, ஆகார் இஸ்மாயேலை ஒரு புதர் மறைவில் வைத்துவிட்டு அம்பு எறியூம் தூரத்தில் போய் நின்றாள். இஸ்மாயேல் உரக்க அழுதுகொண்டிருந்தான்.

அப்போது கடவுளின் தூதன் ஆகாருக்குத்தோன்றி,"இதோ இஸ்மாயேலின் அழுகையை கடவுள் கேட்டார். அவன் வழியும் ஒரு பெரிய சந்ததியை உருவாக்குவார் என்றார்." பின்பு கடவுள் ஆகாரின் கண்களை திறந்தார், அவளும் அங்கே நீர் நிலை இருப்பதை கண்டாள்.

ஆகாரும் இஸ்மாயேலும் பாலை நிலங்களிலுள்ள வனங்களில் வாழத்துவங்கினர். இஸ்மாயேல் மிகச்சிறந்த வேட்டைக்காரனாக மாறினான்.

2/22/2006

11. லோத்துவின் மகள்கள்

லோத்து சோதோமிலிருந்து வெளியேறி சோவார் என்னும் ஊரை சென்றடைந்தார். பின்னர் சோவாரில் வாழ்வதும் பாதுகாப்பல்ல என பயந்து அருகிலுள்ள ஒரு குகைக்குள் சென்று தன் இரு மகள்களோடும் வாழத்துவங்கினார்.

லோத்துவின் மூத்த மகள் இளையவளை நோக்கி,"நம் தந்தையோ முதியவர், வேறு திருமணம் செய்துகொள்ள நமக்கு வேறு ஆடவர்கள் இங்கு இல்லை. நம் இனம் விருத்தியாகும்படி நம் தந்தையை திராட்சை ரச மது அருந்தச் செய்து அவரோடு உறவுகொள்வோம்." என்றாள்.

அப்படியே அன்றிரவு லோத்துவுக்கு திராட்சரசம் அளித்து அவர் அறியாதபடி மூத்தவள் அவரோடு உறவு கொண்டாள். இளையவளும் அடுத்தநாள் லோத்துவோடு உறவு கொண்டாள். பின்னர் கருத்தரித்து இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டனர்.

மூத்தவள் தன் குழந்தைக்கு 'மோவோபு' என்றும் இளையவள் குழந்தைக்கு 'பென் அம்மி' என்றும் பெயரிட்டனர்.

பின் குறிப்பு: இந்தக் கதைக்கு படங்கள் தேவையில்லை :)

2/21/2006

10. சோதோமும், கொமெராவும், ஒரு உப்புக்கல் சிலையும்


இரு தேவ தூதர்களும் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து தங்கினர். உணவருந்தியபின் லோத்துவிடம்,"பாவங்களின் பேரில் சோதோமும் கொமெராவும் கடவுளால் அழிக்கப்படவிருக்கின்றன. நீ உன் மனைவியோடும் மகள்களோடும் சோதோமை விட்டு உடனே வெளியேறு" என்றனர்.

லோத்து தன் மருமகன்களை தம்மோடு வருமாறு கெஞ்சினார். அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்காமல் சோதோமில் தங்கினர்.

லோத்துவும் அவர் மனைவியும் மகள்களும் சோதோமை விட்டு வெளியேற மனமின்றி நின்றுகொண்டிருந்தபோது தேவதூதன் அவர்களை கைபிடித்து அழைத்துச்சென்று,"சோதோமிலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போங்கள், திரும்பிப் பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள்", எனக்கூறி சோதோமிலிருந்து அவர்களை வெளியேற்றினார்.


லோத்துவின் குடும்பம் வெளியேறியதும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சோதோம் கொமெரா மீது
விழுந்தன. இரு பாவ நகரங்களும் அதன் அருகிருந்த சில நகரங்களும் பற்றி எரிந்தன.

லோத்துவின் மனைவி கடவுளின் ஆணையை மறந்து எரியும் நகரங்களை திரும்பி பார்த்தாள். பார்க்கவும் உப்புக்கல் சிலையாய் மாறினாள்.

2/16/2006

9. மூன்று வழிப்போக்கர்கள்


ஆபிரகாமுக்கு 99 வயதாகும்போது கடவுளும் இரு தூதர்களும் அவரின் கூடாரத்திற்கு வழிப்போக்கர்களாய் வந்தனர்.

ஆபிரகாம் அவர்களை உபசரிக்க, விருந்துண்டபின் கடவுள் ஆபிரகாமை நோக்கி "அடுத்த இளவேனில் காலத்தில் உனக்கு சாரா ஒரு மகனை பெற்றுத் தருவாள்" என்றார். திரை மறைவிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சாரா 'எனக்கும் ஆபிரகாமுக்கும் வயதாகிப் போனதே எப்படி எனக்கு மகன் பிறப்பான்' என் நினைத்து சிரித்தாள்.

கடவுள் அளிடம் "ஏன் சிரிக்கிறாய். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என உனக்குத் தெரியாதா?" என "அவள் நான் சிரிக்கவில்லை" என பொய் சொன்னாள்.

விருந்துக்குப் பின் கடவுள் தூதர்களோடு ஆபிரகாமும் புறப்பட்டு சோதோம் கொமெரா நகரங்களை பார்க்கும்வகையில் ஒரு குன்றின்மேல் ஏறி நின்றனர். கடவுள் ஆபிரகாமைப் பார்த்து,"சோதோம் கொமெராவின் பாவங்கள் அதிகரித்துவிட்டன. அவர்களின் பாவங்களுக்காக இந்த நகரங்களை அழிப்பேன்" என்றார். இரு தேவதூதர்களும் சோதோமை நோக்கி நடந்தனர்.

ஆபிரகாம் கடவுளிடம்,"பாவம் செய்பவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் அழித்துவிடுவீரே. நான் சோதோமில் 50 நல்லவர்களை கண்டெடுத்தால் அதை அழிக்காமல் விடுவீரா?" என்றார்.

கடவுளும்,"நீ 50 நல்லவர்களை சோதோமில் கண்டால் அதை அழிக்கமாட்டேன் என்றார்". கொஞ்சம் யோசனைக்குப் பின் ஆபிரகாம் கடவுளிடம்,"50ல் ஐந்து குறைந்தாலும் சோதோமை அழிப்பீரா?" என்றார். "45நல்லவர்களுக்காக சோதோமை அழிக்காமல் விடுவேன்" என கடவுள் சொன்னார்.

ஆபிரகாம் மீண்டும்,"40 பேருக்காக?"

கடவுள்,"அழிக்கமாட்டேன்".

"கோபம் வேண்டாம். 30 பேர் மட்டுமிருந்தால்?"

"அழிக்கமாட்டேன்"

"20 நல்லவர்களுக்காக?"

"அழிக்கமாட்டேன்".

"10 பேர் மட்டுமிருந்தாலோ?"

"அந்த 10 நல்லவர்களை முன்னிட்டு சோதோமை அழிக்கமாட்டேன்" என்றார் கடவுள். அதன்பின் ஆபிரகாம் தன் கூடாரத்துக்குத் திரும்பினார்.

ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தான்.

சோதோமும் கொமெராவும் அழிக்கப்பட்டனவா...?

8. ஆகார் மற்றும் இஸ்மயேல்


எகிப்திலிருந்து திரும்பும்போது ஆபிரகாம் சாரவிற்கு உதவியாக ஆகார் என்கிற பணிப்பெண்ணை அழைத்து வந்தார்.

ஆபிரகாம் குழந்தைப் பேறு இல்லாதிருந்தார், ஆனால் கடவுள் ஆபிரகாமின் தலைமுறையை வானகத்தின் நட்சத்திரங்கள் போல எண்ணமுடியாத படி பெருக்குவேன் என்று வாக்களித்திருந்தார்.

மகப்பேறில்லாததை எண்ணி சாரா ஆபிரகாமிடம் ஆகாரை மணமுடித்து அவள் மூலமாய் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டினாள். பணிப்பெண் மூலம் குழந்தை பேறு அடைவது அப்போது ஒரு வழக்கம்.

ஆகாருக்கும் அபிரகாமுக்கும் திருமணம் நடந்தபின் ஆகார் கருத்தரித்தாள்.

தன் கர்ப்பத்தின் பேரில் ஆகார் கர்வம் கொண்டவளானாள், சாராவை இழிவாக நினைத்தாள். சாரா இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆகாரை கொடுமைப் படுத்த, ஆகார் கொடுமை தாங்காமல் ஆபிரகாமின் வீட்டை விட்டு ஓடிப்போனாள்.

கர்ப்பிணியான ஆகார் பாலைவனத்தில் திரிந்து கொண்டிருக்கும்போது ஒரு கிணற்றடியில் கடவுளின் தூதன் அவளுக்குத்தோன்றி,

"சாராவின் பணிப்பெண் ஆகார்.. எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட. உன் வழி மரபினரையும் பல மடங்குப் பெருகச் செய்வேன். நீ ஒரு மகனை பெற்றெடுப்பாய் அவனுக்கு 'இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய்."
என்றார். இஸ்மயேல் என்றால் 'கடவுள் செவிகொடுத்தார்' என்பது அர்த்தம்.

ஆகார் திரும்பி ஆபிரகாமின் கூடாரத்திற்கே போய்ச் சேர்ந்தாள். இஸ்மயேல் பிறந்தபோது ஆபிரகாமுக்கு வயது 86.

2/15/2006

7. ஆபிரகாம்பாபேலின் கோபுரக் கதைக்கு அடுத்ததாக பைபிளில் சில சந்ததிகள் பட்டியலிடப்படுகின்றன. அதில் ஆபிரகாம் கடைசியாக வருகிறார்.

ஆபிரகாம் 'ஊர்'(Ur) என்கிற ஊரில் வாழ்ந்துவந்தார். ஆபிரகாமும் அவர் தந்தையும் ஆடுமேய்ப்பவர்கள். கடவுள் ஆபிரகாமை சொந்த நாட்டைவிட்டுக் கிளம்பி தான் காட்டும் நாட்டிற்கு பயணிக்கச் சொன்னார். ஆபிரகாம் துவங்கிய இந்தப்பயணம் யூதர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு நெடும்பயணமாக மாறியது.

ஆபிரகாம் பல நாடுகளுக்குச்சென்று வாழ்ந்துவிட்டு கடைசியாக எகிப்துக்குச் செல்கிறார். ஆபிரகாமின் சகோதரரின் மகன் லோத்தும்(Lot) அவரோடு செல்கிறார்.

ஆபிரகாமின் மனைவி சாரா, அழகான பெண். எகிப்தில் நுளையுமுன் ஆபிரகாம் சாராவின் அழகைக்கண்டு எகிப்தியர்கள் தன்னைக் கொன்றுவிட்டு அவளை அபகரிக்கக்கூடும் என நினைத்து சாராவிடம், "நீ என் மனைவி எனச் சொல்லாதே சகோதரி எனக் கூறு" என்கிறார். ஒருவகையில் இது உண்மையானது. சாரவிற்கும் ஆபிரகாமிற்கும் தந்தை ஒருவரே.

ஆபிரகாம் நினைத்தது போலவே சாராவின் அழகில் மயங்கி எகிப்திய மன்னன், பாரோ, ஆபிரகாமுக்கு பொன்னும் பொருளும் அழித்து சாராவை அடையப் பார்க்கையில் கடவுள் ஒரு பெரும் நோய்க்கு எகிப்தியர்களை ஆளாக்கினார்.

பாரோ பின்னர் சாரா ஆபிரகாமின் மனைவி என்பதைத் தெரிந்துகொண்டு, "நீ ஏன் என்னிடம் பொய் சொன்னாய். இதோ எனக்கு நோய் வந்ததற்கு காரணம் நீதான். உடனே உன் மனைவியை அழத்துக்கொண்டு எகிப்தை விட்டு வெளியேறு" என்றான்.

ஆபிரகாமும் எகிப்தைவிட்டு வெளியேறி தான் முன்பு வாழ்ந்து வந்த கானான் நாட்டிற்கு திரும்பினார்.

லோத்து சாதோம் கொமரா நகரங்களுக்கிடயே குடிபுகுந்தான், ஆபிரகாம் கானான் நாட்டிலே வாழத்துவங்கினார்.

2/13/2006

6. பாபேலின் கோபுரம்


நோவாவிற்குப் பிறகு பல தலைமுறைகள் கடந்தபின், உலகம் மீண்டும் பாவபூமியானது. மனிதர்கள் கடவுளை மறந்து தங்கள் பெருமைகளில் ஊறிக்கிடந்தனர்.

எல்லோரும் ஒன்றாய்க்கூடி "நாம் நமெக்கென, வானகங்களை முட்டுமளவிற்கு கோபுரம் ஒன்றை எழுப்புவோம். நாம் பிரிந்து பூமி எங்கும் பரவிப் போகாமல் அதில் ஒன்றாய் வாழலாம். நம் புகழை அந்தக் கோபுரம் நிலைநாட்டும்" என முடிவெடுத்து பாபேலின் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர்.

கோபுரம் உயர்ந்தது. மனிதனின் கர்வமும் உயர்ந்தது. கோபுரம் வானை எட்டுமளவுக்கு வளர்வதைக்கண்டு கடவுள், "இவர்கள் ஒன்றாய், ஒரே மொழி பேசுபவர்களாய் இருப்பதினால் இப்படி தங்களால் முடியாததெதுவுமில்லை என நினைக்கிறார்கள். இவர்கள் பல மொழிகள் பேசுபபவர்களாக மாறட்டும்." என்றார்.

அப்படியே பூமியின் மக்கள் வெவ்வேறு மொழிகளை பேச ஆரம்பித்தனர். ஒருவர் சொல்வது மற்றவர்க்குப் புரியாமல் போனதால் கூட்டம் கூட்டமாய் பிரிந்து தனித்தனியாய் வாழ ஆரம்பித்தனர்.

பாபேல் (அ) பாபிலோன் என்பதற்கு 'குழப்பம்' என்று பொருள்.

5. நோவாவின் பெட்டகம்


இந்தக்கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆதாம் ஏவாளுக்குப் பின் பத்து தலைமுறைகளுக்குப் பிறகு நோவா தோன்றுகிறார். இந்த நேரத்தில் உலகத்தில் மனித இனம் பாவம் மிக்கதாய் ஆகிவிட்டது.

கடவுள் ஏனிந்த மனிதனைப் படைத்தோமோ என மனமுடைந்து, உலகை அழித்துவிட நினைத்தார்.

நோவாவும் அவரது குடும்பமும் கடவுளுக்கு நேர்மையாய் இருந்ததைக்காண்டு கடவுள் நோவாவிடம், "பெரும் வெள்ளப்பெருக்கு ஒன்றை ஏற்படுத்தி இந்த உலகை அழிக்கப்போகிறேன். ஒரு பெட்டகம் (பெரிய அறைகளுள்ள படகு) ஒன்றை செய். உலகிலுள்ள உயிரினங்களில் அனைத்திலும் ஒரு ஜோடியை எடுத்துக்கொண்டு உன் குடும்பத்தோடு அந்தப் படகில் ஏறி வெள்ளத்திலிருந்து உன்னை காப்பாற்றிக்கொள்." என்றார்.

நோவா ஒரு பெரிய படகை கட்டுவதை கண்டவர்கள் அவரை ஏளனம் செய்தனர். 'இவனுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?' என எள்ளினர். நோவா கடவுளின் திட்டத்தை அவர்களுக்கு கூறி மனம் திரும்பச் சொன்னார். அவர்கள் நோவாவை கண்டுகொள்ளவில்லை.

சில நாட்களுக்குப்பின் பெரும் மழை பெய்ய குளங்கள் நிரம்பி வழிந்தன, ஆறுகள் கரையை உடைத்துவிட்டு ஊரை அழிக்கக் கிளம்பின. உலகம் நீரினால் நிரம்பியது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழையும் வெள்ளமும் வந்து, உலகை அழித்தது.

நோவாவின் குட்ம்பத்தினரும் அவர் பெட்டகத்திலிருந்த விலங்குகளும் வெள்ளத்திலிருந்து உயிர்தப்பினர்.

ஒரு வருடத்திற்குப்பின் வெள்ளம் வடிந்தது. நோவாவின் பெட்டகம் ஒரு குன்றின்மேல் தட்டி நின்றது.

நோவா ஒரு பறவையை பறக்கவிட அது ஒரு செடியின் கிளையை பறித்துவந்து தந்தது. பெட்டகம் திறக்கப்பட்டு எல்லோரும் வெளியேறி கடவுளுக்கு நன்றி செய்தனர்.

கடவுள் நோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். "இனிமேல் இதுபோன்று வெள்ளத்தால் உலகின் எல்லா உயிரினங்களும் சாகும்படி செய்யமாட்டேன். இந்த ஒப்பந்தத்தை நினைவு கொள்ள வானவில்லை உருவாக்குகிறேன். ஒவ்வொருமுறை மழை பெய்யும்போதும், வானவில் தோன்றி இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கும்" என்றார் கடவுள்.